search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பண மோசடி"

    • மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள பொத்தாம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சதீஷ் (30), பட்டதாரி. இவரது உறவினர் முருங்கப்பட்டி பாறைக்காட்டை சேர்ந்தவர் கணேசன் (45), இவரது மனைவி அமுதவள்ளி (36), இவர் பொத்தாம்பட்டியில் அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.

    கோவிந்தராஜிடம், வருவாய் துறையில் உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது, அப்பதவியை பெற தலா 5 லட்சம் வீதம் 7 பேருக்கு 35 லட்சம் ரூபாய் செலுத்தினால் உடனே பணியை வாங்கி தருகிறேன் என கணேசன் மற்றும் அவரது மனைவி அமுதவல்லி ஆகியோர் கூறினர்.

    இதை உண்மை என நம்பிய கோவிந்தராஜ் 5 லட்ச ரூபாய் கொடுத்தார். அதனை பெற்ற தம்பதியினர் 2020-ம் ஆண்டு ஜூலை 7-ந் தேதி நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகாவில் கிராம நிர்வாக அலுவலர் பணி வழங்கியது போல் போலி நியமன உத்தரவு, வருவாய் துறை அடையாள அட்டையை வழங்கினர்.

    இதை பெற்ற கோவிந்தராஜ் ஜூலை 20-ந்தேதி நாமக்கல் தாலுகா அலுலகத்திற்கு சென்ற போது அது போலி பணி நியமன ஆணை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து கணேசன், அவரது மனைவி அமுதவள்ளி ஆகியோரிடம் கேட்டபோது முன்னுக்குப்பின் முரணாக பேசினர். மேலும் கோவிந்தராஜ் பணத்தை திருப்பி கேட்டபோது கொடுக்காமல் மிரட்டல் விடுத்தனர்.

    இதுகுறித்து கோவிந்த ராஜ் சேலம் மாநகர போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி அமுதவல்லியை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறவைாக உள்ள கணேசனை தேடி வருகிறார்கள்.

    போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்திய போது மேலும் 6 பேரிடம் தலா 5 லட்சம் வீதம் ரூ.30 லட்சம் வரை அமுதவள்ளி மற்றும் அவரது கணவர் கணேசன் ஆகியோர் மோசடி செய்தது தெரிய வந்தது. இது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பணம் செலுத்தியும் ஒரு மாதமாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் வந்து சேரவில்லை.
    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயரட்சகன் இணையவழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆனந்த ரங்கப்பிள்ளை நகரை சேர்ந்தவர் ஜெயரட்சகன். (வயது 46).

    இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்துவிட்டு தற்போது புதுவையில் தங்கி ஆன்லைனில் முதலீடு செய்து வருகிறார். அவர் கடந்த மாதம் கிரிப்டோ கரன்சி வாங்குவதற்காக தனியார் நிறுவனத்தில் அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் வந்த நபர் நான் தென்னிந்தியாவிற்கான தனியார் நிறுவனத்தின் நிர்வாகி என்றும் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.

    அதை நம்பிய ஜெயரட்சகன் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

    அப்போதைய மார்க்கெட் ஒரு டாலரின் மதிப்பு ரூ.88 என்றும் இருந்தபோதும் தொடர்பு கொண்ட நபர் ரூ. 85-க்கு டாலர் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பி, ஜெயரட்சகன் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்தை அந்த நபர் சொன்ன 4 வங்கி கணக்குகளுக்கு செலுத்தி உள்ளார்.

    இவர் பணம் செலுத்தியும் ஒரு மாதமாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இணையவழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை.
    • பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    சங்கராபுரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம், பரமநத்தம் ரோட்டை சேர்ந்தவர் இஸ்மாயில் ஷேக் மகன் ஷமீர் அகமது (வயது 26). இவர் கடந்த 2021-ம் ஆண்டு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.12 ஆயிரம் வட்டி வழங்குவதாக அறிவித்தார். இதனை நம்பிய ஒரு சிலர் பணத்தை கட்டியுள்ளனர். அறிவித்தபடி வட்டி பணத்தை முதலீடு செய்தவர்களுக்கு கொடுத்துவந்தார்.

    தொடர்ந்து ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.12 லட்சம் என முதலீடு செய்பவர்களுக்கு பல்வேறு வட்டி திட்டங்களை அறிவித்தார். மேலும் மூரார்பாளையம், கீழப்பட்டு, மேலப்பட்டு, பரமநத்தம், நெடுமானுர், சங்கராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் ஏஜெண்டுகளை நியமித்து பொதுமக்களிடம் இருந்து பணம் பெற்றுள்ளார். இந்த பணத்தை வைத்துக் கொண்டு கடந்த 2022-ம் ஆண்டு மூரார்பாளையத்தில் நகை கடை, சூப்பர் மார்க்கெட், ஷேர் மார்க்கெட் போன்ற பல்வேறு நிறுவனங்களைத் திறந்து ஷமீர் குரூப் ஆஃப் கம்பெனியை தொடங்கினார்.

    இந்நிலையில் கடந்த மே மாதத்தில் இருந்து பயனாளிகளுக்கு வட்டி பணத்தை ஷமீர் அகமது வழங்கவில்லை. பணத்தை முதலீடு செய்தவர்கள் ஷமீர் அகமதுவிடம் பணத்தைக் கேட்டனர். விரைவில் தருவதாக கூறிய ஷமீர் அகமது கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முரார்பாளையத்தில் உள்ள கடைகள், அலுவலகத்தை காலி செய்து விட்டு தலைமறைவானார்.

    அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஏஜெண்டுகளை சுற்றிவளைத்து பணத்தை திருப்பி கேட்டனர். இதையடுத்து ஷமீர் அகமது சென்னையில் இருப்பதை ஏஜெண்டுகள் கண்டுபிடித்தனர். அவரிடம் பேசி முரார்பாளையத்திற்கு அழைத்து வந்தனர். பணத்தை கட்டி ஏமாந்த ஏஜெண்டுகள், பொதுமக்கள் பலரும் மூரார்பாளையத்திற்கு வந்து ஷமீர் அகமதுவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் தலைமையில், சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பொதுமக்களிடமிருந்து பணத்தை ஏமாற்றிய ஷமீர் அகமதுவை மீட்டு விசாரணை மேற்கொண்டனர். மேலும் பணம் கட்டிய ஏஜெண்டுகள் மற்றும் பொதுமக்களிடமும் விசாரணை செய்தனர்.

    விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்ட பொதுமக்கள் முதலீடு செய்த ரூ.50 கோடிக்கு வட்டியும் தரவில்லை. பணத்தையும் திருப்பி தராமல், ஷமீர் அகமது மோசடி செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஷமீர் அகமதுவை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு பொதுமக்களிடம் இருந்து பெற்ற பணத்தை என்ன செய்தார்? என்பது குறித்து சங்கராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ராமகிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்தார்.
    • பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ராமகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி லாஸ்பேட்டை நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 25). தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை செய்து வருகிறார்.

    இவரது வாட்ஸ்அப்பில் கடந்த மாதம் 2-ந்தேதி ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில் பகுதிநேர வேலை செய்தால் அதிகமாக சம்பாதிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதற்கு ராமகிருஷ்ணன் விருப்பம் தெரிவித்தார்.

    மேலும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு ராமகிருஷ்ணன் பதிலும் அளித்தார். உடனே அவரது வங்கி கணக்கிற்கு ரூ.150 அனுப்பி வைக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து சோபி என்ற பெண் அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். பின்னர் அவரை இன்ஸ்டாகிராம் குழுவில் இணையுமாறு கூறினார். தொடர்ந்து ராமகிருஷ்ணனும் அந்த குழுவில் இணைந்தார்.

    பின்னர் அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதன் மூலம் அவருக்கு ரூ.650 கிடைத்தது. இந்த நிலையில் சோபி அவரை தொடர்பு கொண்டு நீங்கள் பணம் முதலீடு செய்து நாங்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறினார்.

    இதனை நம்பிய ராமகிருஷ்ணன் பல்வேறு தவணைகளாக ரூ.11 லட்சத்து 95 ஆயிரம் முதலீடு செய்தார்.

    இதன் மூலம் அவரது வங்கி கணக்கில் ரூ.14 லட்சத்து 54 ஆயிரத்து 228 இருப்பதாக காண்பித்தது. அதனை அவர் தனது வங்கி கணக்கிற்கு மாற்ற முயற்சி செய்தார். ஆனால் முடியவில்லை.

    இதனை தொடர்ந்து அவர் சோபியை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் பணம் மோசடி செய்யப்பட்டதை அறிந்த அவர் இதுகுறித்து புதுவை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப்பதிவு செய்து மோசடி செய்த சோபி என்ற பெண்ணை வலைவீசி தேடிவருகிறார்.

    • வங்கிக் கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால்சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர்.
    • வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    இணையதளம் மூலம் வேலைவாய்ப்பு தேடுபவர்களை குறிவைத்து ஒரு கும்பல் வேலைவாய்ப்பு உள்ளது போன்று அவர்களை நம்பவைத்து போலியாக தயாரிக்கப்பட்ட ஆவணங்களை அனுப்பி மோசடி செய்வது வழக்கமாக உள்ளது.

    இதை நம்பி படித்த இளைஞர்கள் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து வருகின்றனர்.

    இதே போல் புதுவையை சேர்ந்த பெண் ஒருவரிடம் இங்கிலாந்தில் வேலைவாய்ப்பு உள்ளதாக கூறி ரூ.30 லட்சத்தை ஆன்லைன் மூலம் பெற்று மோசடி செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக புதுவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கு தொடர்பாக நைஜீரியாவை சேர்ந்த ரியூபென், உகாண்டாவை சேர்ந்த நம்லேபுரோசி, பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் ஆகிய 3 பேரை இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு தலைமையிலான குழு கைது செய்தது.

    கைது செய்யப்பட்டவர்கள் அசாம் மாநிலத்தை சேர்ந்த லால் சங்லிர் சோரி (வயது 24) என்பவரது வங்கிக்கணக்கு மூலம் பணத்தை பெற்றிருப்பது தெரியவந்தது. 9-ம் வகுப்பு வரையே படித்த அந்த வாலிபர் பெங்களூருவில் ஓட்டல் ஒன்றில் சமையல் வேலை செய்துவந்தார்.

    அவரது வங்கிக் கணக்கின் மூலம் மோசடி பணத்தை பெற்றவர்கள் அவருக்கு அவ்வப்போது சிறுதொகையை கமிஷனாகவும் லால்சங்லிர் சோரிக்கு கொடுத்துள்ளனர். மோசடி பணம் என்று தெரிந்தும் அதை அவர் செலவு செய்து வந்ததாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து லால் சங்லிர் சோரியையும் போலீசார் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

    • மோசடி குறித்து பிரசன்னா குமார் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • போலீசார் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    சென்னை :

    கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்தவர் பிரசன்னா குமார் (வயது 33) வண்ணாரப்பேட்டையில் மிட்டாய் கடை மொத்த வியாபாரி. இவரது நண்பர் மூலம் கடந்த ஜனவரி மாதம் தண்டையார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் 2-வது தெருவை சேர்ந்த சுஜாதா (40) ரிஸ்வான் (23) தாய், மகன் அறிமுகம் ஆகியுள்ளார்.

    தாய் மற்றும் மகன் ஆகியோர் பிரசன்னா குமாரிடம் குறும்படம் எடுத்து ஓ.டி.டி. தளங்களில் வெளியிட்டு நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறி குறும்படம் எடுப்பதற்காக ரூ. 15 லட்சம் வாங்கியுள்ளனர். பின்னர் தாய், மகன் பணத்தை வாங்கிக் கொண்டு குறும்படத்தை எடுக்காமல் செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்து விட்டு இருந்துள்ளனர்.

    இது பற்றி பிரசன்னா குமார் வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சுஜாதா மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற ஜாமினில் சுஜாதா விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மகன் ரிஸ்வானை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • இரண்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை
    • தற்போது 3-வது முறையாக இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

    ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் உள்ளார். இவருக்கு அமலாக்கத்துறை நில அபகரிப்புடன் தொடர்புடைய பண மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி 3-வது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.

    ராஞ்சியில் உள்ள அலுவலகத்தில் கடந்த மாதம் 14-ந்தேதி மற்றும் 24-ந்தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியிருந்தது. இரண்டு முறையும் அவர் ஆஜராகவில்லை.

    இதனைத் தொடர்ந்து 3-வது முறையாக இன்று ஆஜராகும்படி சம்மன் அனுப்பியது. இதற்கிடையே, ஜனாதிபதி அளிக்கும் விருந்தில் கலந்த கொள்ளும்படி, ஹேமந்த் சோரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பு ஏற்று இன்று இரவு நடைபெறும் விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார். இதனால் 3-வது முறையாகவும் இன்றும் ஆஜராகமாட்டார் எனத் தெரிகிறது.

    முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "ஹேமந்த் சோரன், ஜனாதிபதி திரவுபதி முர்மு அளிக்கும் ஜி20 மாநாட்டை முன்னிட்டு அளிக்கும் விருந்தில் கலந்து கொள்ள டெல்லி புறப்படுவார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சட்டவிரோத சுரங்க குற்றச்சாட்டில் கடந்த வரும் நவம்பர் 18-ந்தேதி, அமலாக்கத்துறை, சுமார் 9 மணி நேரம் ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

    • சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
    • நடராஜன் வேறு எந்தந்த மருந்துகள் சப்ளை செய்தார்? அவர், இந்த டெண்டர்களை எடுக்க யார் உதவியது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்.,) மூலம் கடந்த 2019-ம் ஆண்டு, புதுவை கர்ப்பிணிகளுக்கான சத்து மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மருந்து கொள்முதல் செய்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டது.

    இந்த மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அனைத்து மருந்துகளும் திரும்ப பெற்று, ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது. அதில் மருந்துகள் தரமற்றது என்பது தெரியவந்தது.

    தொடர் விசாரணையில், தேசிய சுகாதார இயக்கத்தில் (என்.ஆர்.எச்.எம்.,) ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநராக பணியாற்றிய நடராஜன், அவரது மனைவி பத்மா பெயரில் பத்மஜோதி எண்டர்பிரைசஸ், நண்பர் பெயரில் சாய்ராம் ஏஜென்சி என்ற இரு கம்பெனிகளை உருவாக்கி, என்.ஆர்.எச்.எம்., மூலம் விடப்பட்ட டெண்டரில் இந்த இரு கம்பெனிகள் மட்டும் பங்கேற்க செய்துள்ளார்.

    இந்த 2 கம்பெனிகளும் குறைந்த விலைக்கு மருந்து சப்ளை செய்வதாக கூறி டெண்டர் எடுத்து, தரமற்ற மருந்துகளை சப்ளை செய்து ரூ.44 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. அதனையொட்டி, நடராஜன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதுகுறித்து அப்போதைய சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, நடராஜனை தேடி வருகின்றனர்.

    மேலும், நடராஜன் வேறு எந்தந்த மருந்துகள் சப்ளை செய்தார்? அவர், இந்த டெண்டர்களை எடுக்க யார் உதவியது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சில மாதங்களாக பேசாமல் இருந்து வந்தனர்.

    இந்த நிலையில் லாவண்யாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? காதல் பிரச்சனையா? தொழிலில் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் நாங்கள் மாந்திரீக முறையில் தீர்த்து வைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது அவர் தனது காதலுடன் பிரச்சனை இருப்பதாக கூறினார்.

    எதிர்முனையில் பேசியவர், நான் சொல்கிற சில விஷயங்களை செய்து, மாந்திரீக பூஜைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் காதலரை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் மாந்திரீக பொருட்கள் வாங்க வேண்டும், பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லாவண்யா பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 340 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

    இருப்பினும் தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாவண்யாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தொடர்ந்து எனக்கு பல வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி பயமுறுத்தினர்.
    • மீண்டும் அவர்களிடம் பணத்தை கேட்டபோது, எனது பணத்தை திரும்ப தர மறுத்து எனது போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.

    பெங்களூரு:

    பெங்களூரு மன்யாதாடெக் பார்க் பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண் அங்குள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந்தேதி நள்ளிரவில் எனக்கு தானியங்கி தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் பதிவு செய்யப்பட்ட குரலில் உங்கள் மீது போக்குவரத்து விதிமீறல் வழக்கு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் ஆர்.டி.ஓ. மற்றும் அதிகாரிகளுடன் பேச எண் 1ஐ அழுத்தவும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நான் 1ஐ அழுத்தியபோது மறுமுனையில் மும்பை அந்தேரியில் உள்ள வட்டார போக்குவரத்து அதிகாரி என்று கூறிய ஒருவர், என்னிடம் உங்கள் வாகனத்துக்கு எதிராக வழக்கு இருப்பதாகவும், எனவே மும்பையில் உள்ள நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். மேலும் அந்த நபர் போலீசாரிடம் அழைப்பை மாற்றுவதாக கூறினார். அதைத்தொடர்ந்து தான் போலீஸ் என்று ஒருவர் பேசினார். அவரிடம் நான், பெங்களூருவில் தங்கி இருப்பதாகவும், தனக்கு சொந்தமாக வாகனம் ஏதும் இல்லை என்றும், சமீபத்தில் நான் மும்பைக்கு வரவில்லை என்றும் விளக்கினேன்.

    தொடர்ந்து அந்த நபர் என்னை ஸ்கைப்பில் வரும்படி அழைத்தார். நானும் மறுமுனையில் பேசுவது போலீஸ்தான் என்று நம்பி ஸ்கைப்பில் இணைந்தேன். மறுமுனையில் பேசிய நபர் போலீஸ் என்று கூறி அடையாள அட்டையை அனுப்பினார். பின்னர் எனது ஆதார் அட்டை உள்ளிட்ட விவரங்களை சேகரித்தனர். தொடர்ந்து எனக்கு பல வங்கிகளில் கணக்குகள் இருப்பதாகவும், அவை பயங்கரவாத நிதிக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறி பயமுறுத்தினர். மேலும் நிதித்துறை அதிகாரி என்று மற்றொருவரும் தொடர்ந்து பேசினார். பின்னர் அவர் எனது ஒரு வங்கி கணக்கில் இருந்த ரூ.48ஆயிரத்து 325யை அவர்களது கணக்குக்கு மாற்ற சொன்னார்கள். பரிவர்த்தனை சரிபார்ப்புக்கு பிறகே பணம் திருப்பித் தரப்படும் என்றனர். இதேபோல் நான் எனது 2 வங்கி கணக்குகளில் இருந்து ரூ.96ஆயிரத்து 650யை மாற்றினேன். இந்த நிலையில் நான் எனது தோழியிடம் இதுகுறித்து கூறினேன். அவர் இது போலியானது, எனவே இனி பணம் அனுப்பவேண்டாம் என்று கூறினார். இதையடுத்து மீண்டும் அவர்களிடம் பணத்தை கேட்டபோது, எனது பணத்தை திரும்ப தர மறுத்து எனது போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.

    இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார்.

    இதையடுத்து சம்பிகேஹள்ளி போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன்.
    • மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.

    காங்கயம்,

    நண்பர்கள் போல எஸ்.எம்.எஸ்.., அனுப்பி மருத்துவ தேவைக்கு பணம் தேவைப்படுவதாக மோசடி செய்வது அதிகரித்துள்ளது.இது சம்பந்தமாக சைபர் கிரைம் போலீசில் ஏராளமான புகார்கள் வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது குறித்து சைபர் கிரைம் போலீசார் கூறியதாவது:-

    மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் நண்பர் போல மொபைல் போனில், நான் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் உள்ளேன். செலவுக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது' என்று கூறி ரூ.5ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை அனுப்பி வைக்க கோரி மோசடி செய்து வருகின்றனர்.இதனை மோசடி நபர்கள் இரவு 10 மணிக்கு மேல் வாட்ஸ் ஆப்பில் மெசேஜ் ஆக அனுப்புகின்றனர். சில நாட்களுக்கு முன் ஒருவரிடம் பணத்தை மோசடி செய்து உள்ளனர். அவரின் நண்பர் லண்டனில் உள்ளார்.

    அந்த வெளிநாட்டு நண்பரின் வாட்ஸ் ஆப், டி.பி., படத்தை வைத்து அவரின் செல்போன் எண்ணுக்கு ரூ.1 லட்சம் கேட்டு மெசேஜ் வந்துள்ளது.அவரது நண்பர் ஏற்கனவே அவரிடம் தனக்கு உடல்நலக்குறைவு என்று கூறியிருந்ததால், அதை உண்மை என்று நம்பி ரூ.1 லட்சம் அனுப்பி வைத்தார். மறுநாள் நலம் விசாரிக்க நண்பரை அழைத்தபோதுதான் மோசடி என்பது தெரிந்தது.அவர் அளித்த புகாரின்படி, விசாரித்து வருகிறோம்.

    எனவே இதுபோன்று மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்பவேண்டாம்.சம்பந்தப்பட்டவரை தொடர்பு கொண்டு உண்மை தன்மை அறிந்து உதவ வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர் 

    • வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்த கணவர்-மனைவி உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    விருதுநகர்

    வெம்பக்கோட்டை அருகே உள்ள சங்கரபாண்டிய புரத்தை சேர்ந்தவர் கண்ணன் (37). இவருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக தும்பக்குளத்தை சேர்ந்த அழகர்சாமி கூறியுள்ளார். இதனை நம்பி வினோத் குமார் என்பவரின் வங்கி கணக்கில் கண்ணன் பணம் செலுத்தினார். அதன்பின் கண்ணன் கம்போடியா நாட்டிற்கு வேலைக்கு சென்றார். ஆனால் அங்கு வேலை கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பிய கண்ணன் பணத்தை திருப்பி தருமாறு அழகர்சாமியிடம் கேட்டார். ஆனால் அவர் பணத்தை தர மறுத்ததோடு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதற்கு அவரது மனைவி அருணா, வினோத்குமார், சாந்தி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். இதுகுறித்து கண்ணன் ராஜபாளையம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி அழகர்சாமி, அவரது மனைவி உள்பட 4 பேர் மீது கீழராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    ×